நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2017-03-24 23:30 GMT
சென்னை, 

தி.மு.க. கொறடா சக்கரபாணி சட்டசபையில் பேசும்போது, திண்டுக்கல் மாவட்டம் கொத்தயம் கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணிக்காக ரூ.6 கோடியே 97 லட்சம் தமிழ்நாடு அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் கொத்தயம், போடுவார்பட்டி கிராமங்களில் 804 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையிலும், 576 டன் உணவு உற்பத்தி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு 20 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தவிர, கொத்தயம் கிராமத்தில் 82.78 ஏக்கர் நிலமும், போடுவார்பட்டியில் 48.72 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். இத்திட்டத்துக்காக 30.1.2015 அன்று ரூ.11 கோடியே 12 லட்சம் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசு ஆணையிடப்பட்டது.

விரைந்து முடிக்கப்படும்

தற்போது கொத்தயம் கிராமத்தில் 82.78 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. போடுவார்பட்டியில் நில மதிப்பு நிர்ணயம் செய்தபோது, நில உரிமைதாரர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டதால் நேரடி பேச்சுவார்த்தை மூலம் 30.11.2016 அன்று திருத்திய நில மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு 48.72 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏரி அமைக்கும் பணி 50 சதவீதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவு பெறாததால், இப்பணிக்கான ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதுநாள்வரை நிலம் கையகப்படுத்த ரூ.5 கோடியே 25 லட்சமும், பணிகளுக்கு ரூ.4 கோடியே 61 லட்சமும் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் இருப்பதால், இப்பணிக்கான திருத்திய மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்