தொடர் போராட்டத்தில் பங்கேற்க 4 மாவட்ட விவசாயிகள் இன்று டெல்லி பயணம்

திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பங்கேற்க செல்கிறார்கள்.

Update: 2017-03-25 21:45 GMT
கிருஷ்ணகிரி, 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது:- தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கையான கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தமிழகத்திற்கு வறட்சி நிவாரண தொகையாக ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க வேண்டும், நதி நீர் இணைப்பு என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடந்து வரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களிடம் மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

டெல்லி பயணம்

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 150 விவசாயிகள் மாநில பொதுச்செயலாளர் பழனிவேலு தலைமையில் டெல்லியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பங்கேற்க செல்கின்றனர். அவர்கள் சென்னையில் இருந்து ரெயில் மூலம் டெல்லி புறப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்