மதுக்கடைகளை மூட உத்தரவு: பா.ம.க.வின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து

தமிழ்நாட்டில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது, பா.ம.க.வின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-31 19:30 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பா.ம.க. முயற்சிக்கு வெற்றி 

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அதையொட்டியுள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு மதுவை ஒழித்து மக்களை காக்கும் பா.ம.க.வின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

பா.ம.க.வின் மது ஒழிப்பு போராட்ட வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையும். நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் முழுமையாக அகற்றப்படுவதால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் பெருமளவில் குறையும்; அதனால் ஏழைக் குடும்பங்கள் ஆதரவற்றவர்களாவதும், இளம் வயதிலேயே பெண்கள் விதவைகளாவதும் தடுக்கப்படும் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் இனிக்கிறது.

வக்கீல்களுக்கு பாராட்டு 


ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் வராமலே தமிழகத்தின் 70 சதவீத மதுக்கடைகள் மூடவைத்த சாதனையை பா.ம.க. தவிர வேறு எவராலும் படைக்க முடியாது. நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற எனது விருப்பம் மற்றும் வழிக்காட்டுதலின்படி வழக்கு தொடர்ந்து சாதித்த வக்கீல் சமூக நீதிப்பேரவை தலைவர் க.பாலு, அவருக்கு துணை நின்ற வக்கீல்கள் தனஞ்செயன், ஜோதிமணியன் ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் அனைத்தையும் அரசு மூட வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். அதற்கான தேதி நாளை (இன்று) அறிவிக்கப்படும்.

அடுத்தக்கட்டமாக ஆகஸ்டு 15–ந் தேதி முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைவதால் அதற்கேற்ற வகையில் 50 சதவீதம் மது ஆலைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிடவேண்டும். மூடப்படும் மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப மாற்று அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்