திருவள்ளூர்: ரெயில் மோதி கல்லூரி மாணவி பலி
திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் மோதி பலத்த காயமடைந்தார்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பழைய வெண்மனம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரித்தா (வயது17). இவர் ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினந்தோறும் கல்லூரிக்கு கடம்பத்தூரில் இருந்து ரெயில் மூலம் சென்று வருவது வழக்கம். இன்று காலை ஹரித்தா வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக கடம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் மோதி பலத்த காயமடைந்தார். இதனை கண்ட பயணிகள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.