புதிய மின் இணைப்புக்கு ரூ.8,000 லஞ்சம் - வணிக ஆய்வாளர் கைது
லஞ்சம் கேட்ட வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.;
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த சுகன்யா என்பவரது வீட்டிற்கு புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க வணிக ஆய்வாளர் இளையராஜா என்பவர் ரூ.8,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகன்யா, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி வணிக ஆய்வாளர் இளையராஜாவிடம் லஞ்சப் பணத்தை சுகன்யா கொடுக்க சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இளையராஜாவை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.