மருத்துவ மேற்படிப்புக்கான 50 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து: அரசு டாக்டர்கள் போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு

மருத்துவ மேற்படிப்புக்கான 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

Update: 2017-04-26 20:45 GMT

சென்னை,

இதுதொடர்பாக மத்திய–மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மருத்துவ முதுநிலை மேற்படிப்புக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசு டாக்டர்கள் கடந்த 8 நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் ஆதரவு

சென்னையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் அரசு டாக்டர்களை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தீர்வு காண முடியும்

மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 8 நாட்களாக அரசு டாக்டர்கள் போராடி வருகிறார்கள். இது தமிழகம் தழுவிய போராட்டமாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகள் கிராமப்புற பகுதிகளில் இருக்கக்கூடியவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து இருக்கிறது.

எனவே ரத்து செய்து இருக்கக்கூடிய சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்திலே மசோதாவாக கொண்டு வந்து நிறைவேற்றினால் தான் இதற்கு தீர்வு காண முடியும். மாநில அரசு அதற்குரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் மாநில அரசு அதற்கான முயற்சிகளில் நிச்சயமாக ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறது.

நீட் தேர்வு

ஏற்கனவே சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். அனுப்பி வைத்தோமே தவிர, அதற்கான கையெழுத்தை, அனுமதியை ஜனாதிபதியிடம் இருந்து பெற முடியாத நிலையில் தான் மாநில அரசு இருக்கிறது. காரணம் அவர்கள் ஆட்சியை எப்படி காப்பாற்றிக்கொள்வது? பதவிகளில் எப்படி ஒட்டிக்கொண்டு இருப்பது? என்ற நிலையில் தான் இப்போது இருக்கும் ஆட்சி நடைபெறுகிறது.

மேல்முறையீடு

ஆகவே அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். மருத்துவ மேற்படிப்புக்கு அரசு டாக்டர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் மத்திய அரசு தலையிட வேண்டும். அதற்கான அழுத்ததை மாநில அரசு வழங்கிட வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

இந்த போராட்டத்தை தி.மு.க. சார்பில் நாங்கள் ஆதரித்தாலும், போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளிப்பதற்காக வந்தேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கடிதம் எழுதினால் போதாது

கேள்வி:– மருத்துவ மாணவர்கள் மட்டுமல்லாது, விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:– இதற்காகதான் அ.தி.மு.க. பா.ஜ.க.வை தவிர மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டமாக, மக்கள் போராட்டமாக, முழு அடைப்பு போராட்டமாக நடத்தி காட்டி இருக்கிறோம்.

கேள்வி:– ஏற்கனவே ‘நீட்’ தேர்வில் தமிழக அரசு பின்தங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் டாக்டர்களும் போராட்டம் நடத்துகிறார்கள். இதுதொடர்பாக முதல்–அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மேலும் என்ன அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:– கடிதம் எழுதினால் மட்டும் போதாது. டெல்லி சென்று பிரதமரை சந்தித்த போது அவர் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசியதாக செய்திகள் கிடையாது. தற்போது முதல்–அமைச்சருக்கு இரு அணிகள் சேருவது தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.  இவ்வாறு அவர் பதிலளித்தார்.

ஒப்பாரி போராட்டம்

சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக நேற்று நடந்த வழக்கில் நல்ல முடிவு வராததால் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அரசு டாக்டர்கள் நேற்று ஒப்பாரி போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து இன்றும்(வியாழக்கிழமை) போராட்டத்தை தொடருகின்றனர்.

மேலும் செய்திகள்