மீன்பிடி தடைகாலம் நீங்கியது ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் புறப்பட்டனர்

மீன்பிடி தடைகாலம் நீங்கியதை தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் புறப்பட்டனர்.

Update: 2017-06-15 00:00 GMT
சென்னை,

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் என 15 கடலோர மாவட்டங்கள் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அடங்கும். இந்த பகுதிகளுக்கு ஏப்ரல் 14-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டது.

45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைகாலம் இந்த ஆண்டு முதல் 61 நாட்களாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் 61 நாட்களாக நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கியது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர். தங்கள் வலைகளை தயார் செய்வது உள்ளிட்ட பணியில் அவர்கள் ஈடுபட்டனர். பின்னர் நள்ளிரவில் அவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

உதவித்தொகை

இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செயல் தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் பி.ரவி கூறியதாவது:-

ஏற்கனவே நடைமுறையில் உள்ள மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைக்க வேண்டும், மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும், விசைப்படகுகளை பராமரிக்க ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

மீன் விற்பனை நிலையம்

ஆனால் இதை மாநில அரசு பரிசீலிக்கவில்லை. இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சரும் எங்களுடன் கலந்து பேசவில்லை. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த துறைமுகமாக காசிமேடு இருக்கிறது. இதை அரசு சரியாக கையாளாததால் குப்பைக்கழிவுகள் கடல்நீரில் மிதக்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

காசிமேடு துறைமுகத்தில் புதிதாக மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தான் வியாபாரிகள் மீன் விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது. ஆனால் வியாபாரிகள் பழைய இடத்திலே தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், புதிய இடத்தில் போதிய வசதி இல்லை என்று கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை வாங்கி இருக்கிறார்கள்.

விசைப்படகு உரிமையாளர்கள்

புதிய மீன் விற்பனை நிலையத்தில் வியாபாரம் நடந்தால் தான் உயர்ரகமான மீன்களை தரம் பிரிக்க முடியும், புதிய ஏற்றுமதியாளர்களை கவர முடியும் என்று விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகள் புதிய மீன் விற்பனை நிலையத்தில் வியாபாரம் செய்ய சம்மதித்தால் மட்டுமே சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மீன்பிடிக்க செல்வது கேள்விக்குறியாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம்

தடைகாலம் முடிவடைந் ததால் ராமேசுவரம் உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மீனவர்கள் நேற்று பகலிலேயே ஆழ்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்