எதிர்க்கட்சிகள் கருத்துகளை கேட்டறிந்து ஜனநாயகரீதியில் சட்டமன்றத்தை நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் அறிக்கை

தமிழக அரசு சட்டசபையை முறையாக நடத்தக் கூடிய அரசாக செயல்பட முடியவில்லை.

Update: 2017-06-15 19:00 GMT
சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு சட்டசபையை முறையாக நடத்தக் கூடிய அரசாக செயல்பட முடியவில்லை. ஆளும் ஆட்சியிலும், உள்கட்சியிலும் அவர்களுக்கு இருக்கின்ற கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் தான் காரணம். இதனால் தமிழக மக்கள் நலனும், தமிழக வளர்ச்சியும் நேரடியாக பாதிக்கப்படுகிறது.

கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்ந்த பிரச்சினைகளும், குற்றச்சாட்டுகளும் நேரடியாக ஆட்சியாளர்களை பாதிக்கக் கூடிய வகையில் வெளிவந்திருக்கும் போது, அதனை சட்டமன்றத்திலே நடுநிலையோடு கையாண்டு வாக்களித்த மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் தெளிவுபடுத்த வேண்டியது சபாநாயகரின் கடமை.

எனவே தமிழக அரசு மானியக் கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து ஜனநாயகரீதியாக சட்டமன்றத்தை முறையாக நடத்திட வேண்டும். மேலும் ஆட்சி, அதிகாரத்தில் எந்தவித குழப்பமும், பாதிப்பும் ஏற்படாமல் மக்களுக்கான பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டியது தான் தமிழக அரசின் பணியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்