ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு
ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.;
ஆவடி,
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் 4-வது போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பவானீஸ்வரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
2001-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான பிரேம் ஆனந்த் சின்ஹா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உதவி எஸ்.பி.யாகவும், பெரம்பலூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.யாகவும் பணிபுரிந்தார்.
பின்னர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் அண்ணா நகர் துணை கமிஷனராகவும், 4 ஆண்டுகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார். அதன் பின்னர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகவும், தென் சென்னை போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராகவும் பணியாற்றினார். 2020-ல் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். பின்னர் தென்மண்டல ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டார். 2022-ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த காவல் பணிக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.