ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.14.50 உயர்வு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.14 ரூபாய் 50 காசு உயர்ந்து இருக்கிறது.

Update: 2017-07-02 22:45 GMT
சென்னை,

தமிழகத்தில் விறகு அடுப்பை வைத்து சமையல் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. மாநகரங்களில் விறகு அடுப்பு என்பதே இல்லை என்று கூறும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து வருகின்றனர். சமையல் கியாஸ் என்பது அத்தியாவசியமாகி விட்டது.

இதனால், சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, மத்திய அரசு திடீரென சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை அதிகரித்தது.

இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்த ஜெயலலிதா, சமையல் கியாஸ் சிலிண்டர் மீது மாநில அரசு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியான (வாட்) 4 சதவீத வரியை ரத்து செய்தார். இதுமட்டுமல்ல சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான உற்பத்தி வரியையும் ரத்து செய்தார். இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் சுமார் ரூ.15 குறைந்தது.

இந்தநிலையில், ஒரே தேசம், ஒரே வரி, ஒரே சந்தை என்ற முழக்கத்துடன், மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற இந்த புதிய முறையினால், சில பொருட்கள் மீதான வரி அதிகரித்துள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு விலை உயர்ந்த பொருட்களில் சமையல் கியாஸ் சிலிண்டரும் ஒன்று.

தமிழகத்தில் கியாஸ் சிலிண்டர் மீதான மதிப்புக்கூட்டு வரியை ஜெயலலிதா ரத்து செய்ததால், சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.560-க்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிலிண்டரின் விலை ரூ.574.50 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் ஏறக்குறைய ரூ.14.50 கூடுதல் தொகை செலுத்தி சிலிண்டர் வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதில் மானியத்தொகை ரூ.108.42 பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். வினியோகஸ்தர்களுக்கு ரூ.47.63 கிடைக்கும். இந்த கமிஷன் தொகைக்கு கூட 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியாக (ரூ.2.38) விதிக்கப்படுகிறது. இந்த வரி கட்டணமும் நுகர்வோர் தலையிலேயே விழுகிறது. எனவே இந்த ஜி.எஸ்.டி. வரி மூலம் இம்மாதத்தில் இருந்து ரூ.14.50 கூடுதலாக செலுத்தித்தான் கியாஸ் சிலிண்டர் வாங்கமுடியும். 

மேலும் செய்திகள்