திரையரங்குகள் வேலை நிறுத்தம் வாபஸ்: நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு

திரையரங்குகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-07-06 11:04 GMT
சென்னை,

தமிழக அரசு சினிமா மீது விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ந்தேதி முதல் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஓரிரு நாளில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வியிலேயே முடிந்தன.

4-வது  நாளாக தமிழகம் முழுவதும் உள்ள 1000 தியேட்டர்கள் இன்றும் மூடிக்கிடந்தன. நகர பகுதிகளில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கவில்லை. இதனால் ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்தில் இருந்தனர். தியேட்டர்கள் இயங்காததால் நாளொன்றுக்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு  அமைச்சர்களுடன் தியேட்டர்  உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, திரையரங்குகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கேளிக்கை வரி தொடர்பாக அரசுடன் பேச குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக்குழுவில் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் 8 பேரும், அரசு சார்பில் 6 பேரும் இடம் பெறுவார்கள் என்று  அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். நாளை முதல் டிக்கெட் விலையுடன் 28 சதவீத ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் எனவும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்