வக்கீல் தாக்கியதாக புகார்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு செவிலியரை தாக்கிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-07-06 16:45 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் அரசு செவிலியரை வக்கீல் தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மருத்துவமனை ‘டீன்’ நாராயணபாபு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செவிலியர் மகாலட்சுமியை தாக்கிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். தற்போது செவிலியரை தாக்கிய வக்கீல் மீது அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதார துறை செயலாளர் மூலம் தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மருத்துவமனை ‘டீன்’ செவிலியர்களிடம் உறுதியளித்தார்.

தற்போது எந்த வகையிலும் நோயாளிகள் பாதிக்கப்பட கூடாது. செவிலியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆகவே தற்போது தங்கள் பணியை தொடருங்கள் என்று ‘டீன்’ கோரிக்கை வைத்தார்.

‘டீன்’ கோரிக்கைக்கு உடன்பட்டு செவிலியர்கள் தங்கள் பணியை தொடர்ந்தனர்.

மேலும் செய்திகள்