சேலம் உருக்காலை தனியார் மயமாவதை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் அமைச்சர் உறுதி

சேலம் உருக்காலை தனியார் மயமாவதை கைவிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று சட்டசபையில் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

Update: 2017-07-13 23:00 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் பிரின்ஸ்:- கடைகள், வணிக வளாகங்களில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு சென்ற 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 84 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

அமைச்சர் நிலோபர் கபில்:- வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் 24 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 29 லட்சத்து 56 ஆயிரத்து 647 பேர் ஆவார்கள். மீதமுள்ளவர்கள் பள்ளி படிப்பை முடித்தவுடன் பதிந்தவர்கள், 35 வயதை தாண்டியவர்கள் ஆவார்கள். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு, 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, 6 லட்சத்து 42 ஆயிரத்து 195 பேருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வழங்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் பிரின்ஸ்:- சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதை தனியார் மயமாக்க கூடாது.

அமைச்சர் நிலோபர் கபில்:- சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதால், தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவந்தன. சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 27-4-2017 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிட தமிழக அரசு வலியுறுத்தும்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- சேலம் உருக்காலை தனியார் மயமாவதை தமிழக அரசு ஒத்துக்கொள்ளாது என்று அமைச்சர் இங்கே கூறினார். அதற்கு நன்றி. அந்தக் கொள்கையில் அரசு நிலையாக இருக்க வேண்டும். அதேபோல், எண்ணூர் காமராஜர் துறைமுகம் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, 100 சதவீதம் தனியார் துறையாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதை அரசு தடுக்குமா?.

அமைச்சர் பி.தங்கமணி:- இதுபோன்ற திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று சென்னை வந்த மத்திய மந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

மேலும் செய்திகள்