மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்கு தகவல் தொழில்நுட்ப வசதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்கு தகவல் தொழில்நுட்ப வசதி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2017-07-15 00:00 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110-ன் கீழ், தகவல் தொழில்நுட்பவியல் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் “அம்மா இ-கிராமம்” என ஒரு கிராமம் தெரிவு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு, தகவல் தொழில்நுட்பவியல் வசதியினை கொண்ட கம்பியில்லா ஹாட்ஸ்பாட், திறன்மிகு தெரு விளக்குகள், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

இத்திட்டம் “தமிழ்நெட்” என்று அழைக்கப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் போன்ற நிறுவனங்களிடம் இருந்தும், பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்படும்.

பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40 ஆயிரத்திற்கு மிகாமலும், நகர்ப்புறங்களில் ரூ.60 ஆயிரத்துக்கு மிகாமலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு விலையில்லா வீட்டுமனைகள், தையல் எந்திரங்கள் மற்றும் சலவைப்பெட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகள் பயனடையும் வகையில் தற்போது உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும். கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்