கமல்ஹாசனை குறை கூறக்கூடாது ஓ. பன்னீர் செல்வம் அணி கமலுக்கு ஆதரவு

கமல்ஹாசன் குற்றசாட்டுக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர அவரை குறை கூறக்கூடாது.

Update: 2017-07-17 05:33 GMT
சென்னை

நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தன. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த கமலஹாசன் என்னை கைது செய்வது என்றால் நடக்கட்டும். சட்டம் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். 

அத்துடன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசை பற்றி விமர்சனம் செய்த கமல் ஹாசனுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தனர்.

ஜெயக்குமார் தனது பேட்டியில், “தான் நடத்தும் நிகழ்ச்சியை பிரபலப் படுத்துவதற்காக தமிழக அரசின் மீது சேற்றை வாரி வீசுவதா?” என்று கூறினார்.

சி.வி.சண்முகம் தனது பேட்டியில், கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 
நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி இழிவாக பேசி வருகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு பறி போனதால் தற்போது 3-ம் தர நடிகராக கமல்ஹாசன் பேசி வருகிறார். பெண்களை இழிவாக பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கமல்ஹாசனை மிரட்டும் வகையில் பேட்டி கொடுத்த அமைச்சர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன், வைகோ ஆகியோர் 
கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் இன்று  மீண்டும் பேட்டி அளித்து உள்ளனர்.

ஓ.பிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.

கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில் கூற வேண்டுமே தவிர அவரை குறை கூறக்கூடாது. கமலை குறை சொன்னால் அவர்களது மதிப்பு தான் குறையும் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்