ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் 3 நாட்களே சுயநினைவோடு இருந்தார் தீபக் பேட்டி

ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் 3 நாட்களே சுயநினைவோடு இருந்தார் என அண்ணன் மகன் தீபக் கூறினார்.

Update: 2017-09-25 09:27 GMT
சென்னை

முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே
ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன.

அவர் இட்லி சாப்பிட்ட தாகவும், தன்னை சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்த முக்கிய பிரமுகர்களை பார்த்து கை அசைத்ததாகவும் அவ்வப்போது சாதகமான தகவல்களே வெளியாகி கொண்டிருந்தன.

இதன் காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டனர்.  தினமும்  அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு காத்துக்கிடந்த
அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அவ்வப்போது பேட்டியும் அளித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் அம்மாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் ஜெயலலிதாவின் உயிர் திடீரென பிரிந்தது. இது அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதை தொடர்ந்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் மருத்துவ குழுவினரான எம்.எம்.சி. கல்லூரி பேராசிரியர் டாக்டர் பாலாஜி, அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் பாபு ஆபிரகாம், ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்திய டாக்டர் சுதா சேஷையன் ஆகியோர்  பிப்ரவரி 6 ந்தேதி கூட்டாக பேட்டி அளித்தனர் .

அப்போது டாக்டர் பாலாஜி கூறும் போது :-

ஜெயலலிதாவை கவர்னர் வந்து பார்த்தார். முதலில் அவர் வந்தபோது அவருக்கு ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் விளக்கம் அளித்தார். இரண்டாம் முறை வந்தபோது, தீவிர சிகிச்சை பிரிவில், கண்ணாடி கதவுக்கு வெளியே இருந்து ஜெயலலிதாவை கவர்னர் பார்த்தார். அப்போது ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்தி கவர்னரிடம் காட்டினார். பதிலுக்கு கவர்னரும் அப்படியே செய்தார்.

ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை என்று கவர்னர் கூறியதாக நீங்கள் தெரிவித்தால், அது பற்றி அவரது அலுவலக அதிகாரியிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள்.  இவ்வாறு டாக்டர் பாலாஜி கூறினார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன்  மகன் தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில்  ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் . அந்த சமயத்தில் ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை; தானும் மருத்துவமனையில் இருந்ததாக தீபக் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் மொத்தம் 75 நாட்கள் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார்.ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்