ஓராண்டுக்கு பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்கு பிறகு முரசொலி அலுவலகம் சென்றார்.

Update: 2017-10-20 00:00 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்கு பிறகு முரசொலி அலுவலகம் சென்றார். அங்கு பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இது தி.மு.க. தொண்டர்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலிலும், பத்திரிகை துறையிலும் முத்திரை பதித்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக பணியாற்றிய கருணாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். உடல் நலம் கருதி அவரை பிரபலங்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்திக்க வேண்டாம் என்று தி.மு.க. தலைமை தெரிவித்தது.

ஓராண்டாக வெளி நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதியால் 1942-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முரசொலியின் நாளிதழின் 75-வது ஆண்டு பவள விழா கடந்த ஆகஸ்டு 10-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் என்று கருதப்பட்ட நிலையில், உடல் நிலை காரணமாக அவர் மேடைக்கு வரவில்லை.

முரசொலி பவள விழாவையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி இருக்கையில் பேனாவுடன் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றுடன் ஒன்றிப்போன விஷயங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியும் இடம் பெற்று இருந்தது. இதனை பலரும் ஆர்வத்துடன் ரசித்து, தங்கள் எண்ணங்களை வெளியிட்டனர்.

கண்காட்சியை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாகவே கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து முரசொலி கண்காட்சியை தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க அதற்கான ஒப்புதலை மு.க. ஸ்டாலின் வழங்கினார். அன்று முதல் இன்று வரை முரசொலி அலுவலகத்திற்கு தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி, மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் வந்து, கண்காட்சியையும், கருணாநிதியின் மெழுகு சிலையையும் பார்த்து செல்கின்றனர்.

பலரும் கண்காட்சியை பார்த்து சென்றாலும் விழாவின் நாயகனான கருணாநிதி இந்த கண்காட்சியை பார்க்க முடியவில்லை. உடல் நலத்தை காரணம் காட்டி அவரது வருகை நடைபெறாமல் போனது.

இந்தநிலையில், தொண்டர்கள் கார்கள் படை சூழ கருணாநிதி முரசொலி அலுவலகத்திற்கு நேற்று இரவு 7.10 மணிக்கு வந்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன், கருணாநிதியுடன் சேர்ந்து காரில் வந்தார். கருணாநிதியின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தபோதும், அவரது வருகை குறித்த தகவல் பரவியதை தொடர்ந்து, சாலைகளில் தொண்டர்கள் கூட்டம் குவிந்தது.

கருணாநிதியை பார்த்ததும் தொண்டர்கள் கலைஞர் வாழ்க, என்று வாழ்த்து கோஷமிட்டனர். முரசொலி அலுவலகத்திற்குள் கருணாநிதியின் கார் நுழைந்ததும், கருணாநிதியை தி.மு.க. செயல் தலைவரும், அவரது மகனுமான மு.க.ஸ்டாலின், மகள் செல்வி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் வாசல் வரை வந்து வரவேற்று, அழைத்து சென்றனர்.

முரசொலி அலுவலகத்திற்குள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது மெழுகு சிலையை கருணாநிதி மிகவும் ஆர்வத்துடன் ரசித்தார். அவருடன் முரசொலி அலுவலக ஊழியர்கள் உரையாடினர். தன்னுடைய கைகளை அசைத்து கருணாநிதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சி அங்குள்ளவர்களை நெஞ்சுருக செய்தது.

கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தபோது முரசொலி அலுவலத்திற்கும், அண்ணா அறிவாலயத்திற்கும் தினமும் செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு நவம்பர் முதல் முரசொலி அலுவலகத்திற்கு அவர் செல்லவில்லை. அதன் பிறகு தற்போது தான் ஓராண்டுக்கு பிறகு முரசொலி அலுவலகத்திற்கு கருணாநிதி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 40 நிமிடம் முரசொலி அலுவலகத்திற்குள் இருந்த கருணாநிதி தன்னை வரவேற்றவர்களிடம் கைகளை அசைத்து நன்றி தெரிவித்தபடி அங்கிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார்.

இது குறித்து தி.மு.க. தொண்டர் ஒருவர் கூறும்போது, ‘எங்கள் தலைவரின் தரிசனம் இன்று கிடைத்துள்ளது. நாளை உடன் பிறப்பே என்ற அவரின் கணீர் குரல் கேட்கும். அந்த நாளுக்காக விழி மேல் விழி வைத்து காத்திருப்போம்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்