அரசியல் லாபம் தேடக்கூடாது நடிகர் விஜய்க்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

சினிமா துறையை தவறாக பயன்படுத்தி அரசியல் லாபம் தேடக்கூடாது என நடிகர் விஜய்க்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-20 23:00 GMT
நாகர்கோவில்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயக வழியில் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால் தான் சார்ந்திருக்கக்கூடிய ஒரு துறையை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தவறான விஷயங்களை கொண்டு சென்று, அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.

தற்போது நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘மெர்சல்‘ படத்தில் அரசியல் விமர்சனங்களை தொடங்கி வைத்திருப்பது சினிமாவுக்கும் நல்லதல்ல, அரசியலுக்கும் நல்லதல்ல. சினிமா பார்க்க வரக்கூடிய ரசிகர்கள் அந்தந்த நடிகருடைய நடிப்பு திறமைக்காக வருகிறார்களே தவிர, அரசியலுக்காக வருவது இல்லை.

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள பல வசனங்கள் உண்மைக்கு மாறான, தவறான கண்ணோட்டத்தை கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். இது வருத்தத்துக்குரிய விஷயம். சம்பந்தப்பட்டவர்கள் அதுபோன்ற வசனங்களை நீக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

கமல்ஹாசன், விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான கருத்துக்களை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால், நீங்கள் சினிமாவில் பொய்யான ஒரு விஷயங்களை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடிகர் கமல்ஹாசன் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக தற்போது கூறிய கருத்தை நான் அறிந்தேன். தற்போதைய கருத்துக்கு நாளை அவர் மன்னிப்பு கேட்பார். பணமதிப்பிழப்பு பற்றி ஆரம்பத்தில் பாராட்டினார்கள். ஜி.எஸ்.டி. பற்றி பாராட்டினார்கள்.

தற்போது தவறு என்று சொன்னால் ஒரு அரசியல்வாதியின் நிலைப்பாடு என்ன? அரசியலில் ஒரு கருத்தை சொன்னால் ஆழ யோசித்துச் சொல்ல வேண்டும். நேற்று சொன்னதற்கு இன்று மன்னிப்பு கேட்கிறேன் என்று இருக்கக்கூடாது.

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி திடமாக இருந்தபோது எதிர்ப்புகள் வந்தது உண்டா? ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இதுபோன்ற சந்தேகங்கள், எதிர்ப்புகள் உண்டா? பலம் பொருந்திய தலைமை இல்லாமல் போகும்போது திடீர் தலைவர்கள் உருவாவதற்கான முயற்சி இது.

அந்த முயற்சியில் யார் அதிகமாக ‘நெகட்டிவ்’ கருத்துகளை பேசுவது என்பதில் பெரிய போட்டி நடக்கிறது. அதனால் மத்திய அரசின் திட்டங்கள் ஒன்றும் வரக்கூடாது என்று பேசுகிறார்கள். தமிழக ஆட்சியிலும் திடமான தலைமை இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்