போலீஸ் சித்ரவதையால் வாலிபரின் சிறுநீரகம் பாதிப்பு:ஓய்வுபெற்ற நீதிபதி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ் சித்ரவதையால் வாலிபரின் சிறு நீரகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-10-21 20:45 GMT
சென்னை,

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவைச் சேர்ந்தவர் நூர்பாஷா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய மகன் சேக் சாகுல் ஹமீதுவை (வயது 21), எந்த காரணமும் கூறாமல் காஞ்சீபுரம் மாவட்டம், சதுரங்கபட்டினம் போலீசார் கைது செய்து, 4 நாட்கள் தாக்கி, உணவு மற்றும் குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். போலீசார் தாக்கியதால் என் மகனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. கை விரல்களும் துண்டிக்கும் நிலையில் உள்ளது. எனவே, அவனுக்கு முறையான சிகிச்சை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் மகனுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அரசு செலவில் சிகிச்சை வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில், சேக் சாகுல் ஹமீதின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அவரது கை விரல்கள் அழுகிய நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மகன் போலீசாரால் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ். ராமநாதனை நியமித்து உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையை மேற்கொள்ள நீதிபதி ராமநாதனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும், அவர் கேட்கும் ஆவணங்களை போலீசார், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்