எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிப்பு

வருமான வரித்துறை அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-11-18 23:45 GMT

சென்னை,

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். இதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சோதனை நடந்த வேளையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சுமார் 60 பேர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். ஒருவர் தீக்குளிக்கவும் முயற்சித்தார்.

பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து, நேற்று அதிகாலை விடுவித்தனர்.

தமிழக அரசின் அனுமதியோடு தான் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்திருப்பதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். எனவே அவர்கள் சென்னையில் உள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரின் அனுமதியின்றி யாரும் அப்பகுதியில் அனுமதிக்கப்படுவது இல்லை.

போயஸ் கார்டனில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே போயஸ் கார்டன் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் 2 நுழைவுவாயில்களிலும் 10–க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்