‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி

ராஜ் பவனில் அசைவத்துக்கு இனிமேல் அனுமதி கிடையாது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2017-11-20 21:15 GMT
சென்னை,

தமிழக கவர்னராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் 6-ந்தேதி பொறுப்பு ஏற்றார். தமிழக மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தொன்மைவாய்ந்த தமிழ் மொழியை பன்வாரிலால் புரோகித் கற்று வருகிறார். தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தனக்கு யாரும் பூங்கொத்துகள், சால்வைகள் தரக்கூடாது என்று அறிவித்தார். அதன் பின்னர் யாரிடமும் அவர் பூங்கொத்து, சால்வை பெறுவது இல்லை.

சமீபத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், பூங்கொத்து கொடுக்கவேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தார். அப்போது, தன்னுடைய அறிவிப்பில் இருந்து பின் வாங்காத பன்வாரிலால் புரோகித், அந்த அமைச்சரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்.

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் பன்வாரிலால் புரோகித் அரசு உயர் அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனாலும் எதற்கும் அஞ்சாத அவர் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். கவர்னரின் வழக்கமான நடைமுறை, கவர்னர் மாளிகையின் மரபுகளையும் அவர் அதிரடியாக மாற்றி வருகிறார்.

வழக்கமாக கவர்னர் டெல்லிக்கு சென்றால் கவர்னர் மாளிகையில் இருந்து 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடன் செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் டெல்லிக்கு அலுவலக ரீதியாக சென்றபோது எதற்கு வீண் செலவு என்று, ஒரே ஒரு அதிகாரியை மட்டும் பன்வாரிலால் புரோகித் தன்னுடன் அழைத்துச்சென்றார்.

இதேபோல தமிழகத்துக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த முன்னாள் கவர்னர் ஒருவர் ராஜ் பவனில் தங்கியிருந்தார். விருந்தாளியாக வந்தவர்கள் 5 நாட்களுக்கு மேல் ராஜ் பவனில் தங்க முடியாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் 5-வது நாளிலேயே தனது பயணத்தை முடித்துவிட்டு, நடையை கட்டினார் அந்த முன்னாள் கவர்னர்.

பன்வாரிலால் புரோகித் தன்னுடைய அதிரடி ஆட்டங்களை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், கவர்னர் மாளிகையை சுத்த சைவ மண்டலமாக தற்போது அறிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் உள்ளேயும், வளாகத்தின் பிற பகுதிகளிலும் யாரும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசைவ உணவு வகைகளை சமைப்பதற்கும் தடை போடப்பட்டுள்ளது. முட்டைக்கு கூட கவர்னர் மாளிகையில் அனுமதி கிடையாது.

கவர்னர் மாளிகைக்கு விருந்தினராக வருபவர்களுக்கும் சைவ உணவு வகைகளே இனிமேல் பரிமாறப்பட உள்ளது. இதன் மூலம் ராஜ் பவன், சுத்த சைவ பவனாக மாறியிருக்கிறது. அதேசமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே சென்று சாப்பிட்டுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோகித்தின் அதிரடி சுழலில் அடுத்து சிக்கப்போவது நிர்வாகம் தான் என்று ராஜ் பவன் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. 

மேலும் செய்திகள்