‘‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு உருவாகி விட்டார்’’ தொல்.திருமாவளவன் கருத்து

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது அரசியல் வாரிசாக, அ.தி.மு.க.வின் உண்மையான வாரிசாக யார் வருவார்? என்பதை தீர்மானிக்கும் களமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது.

Update: 2017-12-24 17:27 GMT
சென்னை, 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்த கருத்து வருமாறு:–

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது அரசியல் வாரிசாக, அ.தி.மு.க.வின் உண்மையான வாரிசாக யார் வருவார்? என்பதை தீர்மானிக்கும் களமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளதால், ஜெயலலிதா அரசியல் வாரிசு யார்? எனும் கேள்விக்கும் தற்போது உறுதியான பதில் கிடைத்திருக்கிறது. அந்த நபரும் உறுதியாகி விட்டார்.

அ.தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரன் அணி என இரண்டுமே பண பட்டுவாடாவை அரங்கேற்றி, தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டன. இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்றுவிட்டதால், அக்கட்சி பலவீனம் அடைந்து விட்டது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. இது வெறும் இடைத்தேர்தல் தான், பொதுத்தேர்தல் அல்ல. எதுவாகினும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயக முறையில் தேர்தல் முடிவுகளை மதித்து, தோல்வி அடைந்த கட்சிகள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்கவும் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்