பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. #tnnews #tamilnadu #tamilnews

Update: 2018-01-20 00:15 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது.

கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது.

இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.

உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் வருமாறு:-

இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது. அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக் கிறது.

இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

வெளியூர்களுக்கு செல்லும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்தமட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் தற்போதுள்ள 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

30 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கான விரைவு பஸ் கட்டணம் 17 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆகவும், அதிசொகுசு, இடைநில்லா பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ்கள் ஆகியவற்றுக் கான குறைந்தபட்ச கட்டணம் 18 ரூபாயில் இருந்து 27 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேதூரம் அதிநவீன சொகுசு பஸ்சில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் 21 ரூபாயில் இருந்து 33 ரூபாய் ஆகவும்

குளிர்சாதன பஸ்சுக் கான கட்டணம் 27 ரூபாயில் இருந்து 42 ரூபாய் ஆகவும், வால்வோ பஸ் கட்டணம் 33 ரூபாயில் இருந்து 51 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மலைப் பகுதிகளில் சாதாரண பஸ்களில் 6 கி.மீ தூரம் பயணம் செய்ய இதுவரை ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்த அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இதேபோல் விரைவு பஸ்களில் 30 கி.மீ தூரத்துக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 20 ரூபாய் அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இந்த கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. 

மேலும் செய்திகள்