குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-02-02 22:45 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அடர்லி அருகே முத்திரி தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேயிலை பயிரிடப்பட்டு உள்ளது. தோட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்திரி தோட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. தோட்ட ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து எஸ்டேட் நிர்வாகத்தினர் குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தது 4 வயது ஆண் சிறுத்தைப்புலி என தெரியவந்தது.

இறந்து கிடந்த சிறுத்தைப் புலிக்கு கால்நடை டாக்டர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினார். சிறுத்தைப்புலியின் உடற்பாகங்கள் ரசாயன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுத்தைப்புலியின் உடல் அந்த இடத்திலேயே தீ வைத்து எரிக்கப்பட்டது.

வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை ஏதாவது வனவிலங்கு தாக்கியதில் அது இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்