ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கான டெண்டருக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கான ‘டெண்டர்’ நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-02-02 22:15 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.துரைசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். அவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவது சட்டவிரோதமானது. இதனால் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை வேறு இடத்திற்கு மாற்றவும், மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரியும் நான் ஏற்கனவே தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை சட்டத்தின்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் எவ்வித கட்டுமானமும் கூடாது. இதை பல்வேறு தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த விதிகளுக்கு புறம்பாக ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டுவதற்கான பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தடை விதிக்க வேண்டும்

இதுதொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளபோதே அதைமீறி தற்போது மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்டுவதற்கு கடந்த மாதம் 11-ந்தேதி டெண்டர் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 6-ந்தேதி வரை டெண்டர் படிவங்களை பெறலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் படிவங்கள் 7-ந்தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த டெண்டருக்கு தடைவிதிக்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே நான் தொடர்ந்துள்ள வழக்கில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

மேலும் செய்திகள்