நுங்கம்பாக்கத்தில் நடந்த பாலிடெக்னிக் மாணவர் கொலையில் 3 பேர் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த பாலிடெக்னிக் மாணவர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-02 22:45 GMT
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் அப்பு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கிண்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார். கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் நடந்துவந்தபோது கொடூரமான முறையில் கழுத்தில் கத்தியால் குத்தி மாணவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் ரஞ்சித்தை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கொலையாளிகள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சியும், ரஞ்சித் உயிர்பிழைக்க ஓடிவரும் காட்சியும் அந்த பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. கேமரா காட்சிகளை வைத்து கொலையாளிகள் 3 பேர் யார்? என்று நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

3 பேர் கைது

நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காதல் பிரச்சினையில் மாணவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளியானது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி கஞ்சா கும்பலை சேர்ந்த 3 பேரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

கைதான வடபழனி திருநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 21), சாலிகிராமம் காவேரி தெருவை சேர்ந்த நவீன்குமார் (22), போரூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சிவகணேஷ் (21) ஆகிய மூவரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

செல்போன் பறிக்க முயற்சி

சம்பவத்தன்று 3 பேரும் போதை மயக்கத்தில் கொலை நடந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது ரஞ்சித் செல்போனில் பேசியபடி நடந்துவந்தார். எங்களை பார்த்தவுடன் அவர் தனது செல்போனை சட்டை பைக்குள் வைத்து மறைத்தார்.

அவரது செல்போனை நாங்கள் பறிக்க முயன்றோம். அதில் ஏற்பட்ட சண்டையில் கத்தியால் ரஞ்சித்தின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டோம் என்று கொலையாளிகள் 3 பேரும் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைதானவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது. 

மேலும் செய்திகள்