கனடா நாட்டில் திருவள்ளுவர் சிலை மே மாதம் திறக்கப்படுகிறது

கனடா நாட்டில் வருகிற மே மாதம் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது.

Update: 2018-02-22 21:45 GMT
சென்னை,

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கனடா நாட்டில் வருகிற மே மாதம் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது.

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’ என்ற உன்னத நோக்குடன் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 31 திருவள்ளுவர் சிலைகளை அமைத்து உள்ளது. மேலும் திருக்குறள் மாநாடுகளையும் நடத்தி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வி.ஜி.பி. நிறுவனங்களின் தலைவரும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க நிறுவனருமான வி.ஜி.சந்தோஷம் செய்து வருகிறார்.

கனடா டொரொன்டோவில் வரும் மே 5-ந்தேதி கனடா ஸ்காபரே சைவ மண்டபத்தில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 32-வது திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது.

சிலையை கனடா நாட்டு மந்திரிகள் முன்னிலையில் டொரொன்டோ மேயர் திறந்து வைக்கிறார். இவ்விழாவில் இலங்கை ராஜாங்க கல்வி மந்திரி ராதாகிருஷ்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த சங்கத்தின் 33-வது திருவள்ளுவர் சிலை நியூயார்க்கில் மிடில் வில்லேஜில் உள்ள நியூயார்க் தமிழ்க் கோவில் வளாகத்தில் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைக்கிறார்.

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு திருவள்ளுவர் சிலைகள் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கோ.விஜயராகவன், தொழிலதிபர் அபுபக்கர், இணைச்செயலாளர் வி.ஜி.பி. ராஜாதாஸ், அமெரிக்க தமிழ்ச் சங்க தலைவர் பிரகாஷ்சாமி, இலங்கை மறவன்புலவு சச்சிதானந்தம், எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் செயலாளர் கரு.நாகராஜன், ம.பொ.சி. மகள் மாதவி பாஸ்கரன், மலேசிய எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு குழுவின் தலைவர் மாணிக்கவாசகம், பேராசிரியர் உலகநாயகிபழனி, கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் திருவள்ளுவர் விருதாளர் பெரியண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்