மருத்துவ மேற்படிப்பில் மராட்டிய மாநிலத்தை பின்பற்றி தமிழக அரசும் ஆணை பிறப்பிக்க வேண்டும்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2018-02-25 22:13 GMT

சென்னை,

‘நீட்’ தேர்வு குறித்து, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய 2 மசோதாக்கள் ஓராண்டுக்குமேல், மத்திய அரசில் எவ்வித பதிலும் தராத நிலையில், கிடப்பில் போடப்பட்டு இருப்பது சட்டமன்ற அவமதிப்பின் ஒரு அம்சம் என்றே கூறவேண்டும்.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்.க்கு ஆரம்பித்து, மருத்துவ மேற்படிப்பிலும் அதன் மூக்கு நுழைக்கப்படும் நிலையில், மராட்டிய மாநில அரசு போட்டுள்ள ஒரு ஆணை மிக முக்கியமானதாகும்.

மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்வருவோர், அந்த மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவராக இருந்தால்தான் வாய்ப்பு கிட்டும்; மனு போடும் தகுதியே அதனடிப்படையில் தான் என்று அந்த அரசு ஆணை வற்புறுத்துகின்றது. அதே வழிகாட்டும் முறைகளை தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு, சுகாதாரத் துறை பின்பற்றினால், குறைந்தபட்சம் நமது மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்த நமது மாணவ–மாணவிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படும்.

தமிழ்நாடு முதல்–அமைச்சர், மருத்துவக் கல்லூரிக்குரிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அமைச்சரவை உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அரசு ஆணையாக வெளியிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்