ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எதிரொலியாக ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய தலைமைக்கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-25 23:15 GMT
சென்னை,

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவர் உருவம் பொறித்த முழு உருவ வெண்கல சிலை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள, இந்த சிலை கொஞ்சம் கூட ஜெயலலிதா தோற்றம் போன்று இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பலரும் வசைபாடி வருகின்றனர்.

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் முகத்தை சித்தரித்து ஜெயலலிதா சிலை வடிவமைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த பதிவுகளில் கூறப்பட்டது. ஜெயலலிதா முகம் போன்று இல்லை, முகம் சிறிதாக இருக்கிறது என அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளும் அதில் குறிப்பிடப்பட்டன. ஜெயலலிதா வெண்கல சிலையில் உயிரோட்டம் இல்லை என்று கட்சி தொண்டர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, ‘ஜெயலலிதாவின் சிலையில் கம்பீரம் இல்லை’ என்று டி.டி.வி.தினகரனும், ‘புதிதாக திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதா போன்று இல்லை’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், ‘கட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையே அல்ல’ என்று சசிகலாவின் சகோதரர் திவாகரனும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டதன் எதிரொலியாக ஜெயலலிதா வெண்கல சிலையில் மாற்றம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நேற்று நிருபர்கள், ஜெயலலிதாவின் உருவச்சிலை தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளிவருவதால், மாற்றம் செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த அவர், ‘ஜெயலலிதாவின் உருவச்சிலை திறந்தது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஒட்டு மொத்த மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உருவச்சிலை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் வெளிவருகின்றன. அதன் அடிப்படையில் ஜெயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்வதற்கு தலைமைக் கழகம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கும்’ என்றார்.

இதேபோல கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜெயலலிதாவின் உருவத்தையொட்டி இருக்க வேண்டும் சிலை. ஆனால் சில நேரங்களில் மாறுபடுவதும், அதற்கான கருத்துகள் வருவதும் சகஜம் தான். எங்கள் நோக்கங்கள், எண்ணங்கள் ஜெயலலிதாவின் எண்ணங்கள், கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்’ என்றார். 

மேலும் செய்திகள்