சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானது - விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானது என விசாரணை ஆணையம் தெரிவித்து உள்ளது. #Jayalalithaa #Sasikala

Update: 2018-03-21 13:17 GMT

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த 12–ந் தேதி சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். வேதா நிலையத்தில் மயங்கி விழுந்தது முதல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மரணம் வரை ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது என செய்தி வெளியாகியது. 
அதன் முழு விபரம்:-

 பிரமாண பத்திரத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தம்பிதுரை மற்றும் பிற அமைச்சர்கள் பார்த்தார்கள் என்று சசிகலா கூறிஉள்ளதாக செய்தி வெளியாகியது. இப்போது இதனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மறுத்து உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானது என விசாரணை ஆணையம் தெரிவித்து உள்ளது. ஜெயலலிதாவை மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், நிலோபர் கஃபில் பார்த்ததாக சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறு என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது.

பிரமாண பத்திரத்தில் சசிகலா தெரிவித்துள்ளதாக நாளிதழில் வெளியான பல தகவல்கள் உண்மையல்ல. வாக்குமூலம் தொடர்பாக வெளிவந்த தகவல்கள், சசிகலாவின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் 20 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்ததாக கூறப்படுவது தவறு. பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், நிலோஃபர் கபில் ஆகியோர், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாக வாக்குமூலத்தில் இல்லை என விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்