மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. #TNGovernment #MarinaProtest #CauveryIssue

Update: 2018-04-28 15:02 GMT
சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு  ஒருநாள் அனுமதி வழங்கி  உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. 

இந்த நிலையில், மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை காவல்துறை மேல் முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனு அவசர வழக்காக இன்று மாலையே விசாரிக்கப்பட்டது

இதில் வாதிட்ட அரசு தரப்பு,  மெரினாவில் போராட யாரையும் அனுமதிப்பதில்லைமுதல்வர், துணை முதல்வரே சேப்பாக்கத்தில்தான் உண்ணாவிரதம் இருந்தனர். தனி நீதிபதி உத்தரவு தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இந்த உத்தரவை அனுமதித்தால், 25 அமைப்புகள் நாளை போராட்டம் நடத்த காத்திருக்கிறது. மூன்று இடங்கள் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருப்பதைப்போல், இடத்தை முடிவு செய்கிற அதிகாரம் சென்னை மாநகர காவல் சட்டத்தின் படி காவல் ஆணையருக்கே உள்ளது. நாங்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கவில்லை. இடத்தைதான் தீர்மானிக்கிறோம். கடந்த ஆண்டு அனுமதியில்லாமல் சிலர் கூடி, அது, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பெரிய அளவிலான கூட்டமாக மாறியது” என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர், “சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பல போராட்டங்கள் மெரினாவில் நடந்துள்ளது” என வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,  சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி தந்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அரசு ஒதுக்கிய 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரினால் அரசு பரிசீலிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும் செய்திகள்