2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு

தகராறு செய்தவர்களை கைது செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2018-05-12 21:30 GMT
முசிறி, 

தகராறு செய்தவர்களை கைது செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 50) வக்கீல். இவரது மகன்கள் பிரவீன்குமார் ்(24), அபினேஷ் (22). இதில் அபினேஷ் திருச்சி சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஆசைத்தம்பிக்கும், அவரது மகன்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் செவந்தலிங்கபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், பழனியாண்டி மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அன்று இரவு ஆசைத்தம்பிக்கும், அவரது மகன்கள் பிரவீன்குமார், அபினேஷ் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆசைத்தம்பியை அவரது மகன்கள் இருவரும் தாக்கினர்.

இதைப் பார்த்த, அங்கு நின்று கொண்டிருந்த கிராம முக்கியஸ்தர்கள் சிலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அபினேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் லோகேஷ் (18), மதன் (26) ஆகியோர் சமாதானம் பேசியவர்களிடம் அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், போலீஸ்காரர்கள் உமர்முக்தா (33), மோகன் (33) உள்ளிட்டவர்கள் அவர்களை கைது செய்ய சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் போலீசாரிடம் தகராறு செய்து, அவர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் போலீஸ்காரர்கள் உமர்முக்தா, மோகன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த மோகன் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், லேசான காயமடைந்த உமர்முக்தா முசிறியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பிரவீன்குமார், அபினேஷ், லோகேஷ், மதன் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்