விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுக்கவில்லை

விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுக்கவில்லை என்று சென்னையில் உள்ள இங்கிலாந்து துணைத்தூதர் பரத் ஜோஷி கூறினார்.

Update: 2018-05-15 22:30 GMT
சென்னை,

இங்கிலாந்து துணைத்தூதர் பரத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது. உலக நாடுகளுக்கு இந்தியாவும், இங்கிலாந்தும் நல்ல நட்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. அங்கு பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் தெரசா மே தனது முதல் பயணமாக இந்தியாவுக்குத்தான் வந்தார். இதிலிருந்தே இந்தியாவுக்கு, இங்கிலாந்து எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இங்கிலாந்துக்கு சென்றபோதும், டிஜிட்டல் ஹெல்த் கேர் உள்பட பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்தியாவில் வங்கி பண மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றவர்களுக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுப்பதாக கூறுவதை நான் மறுக்கிறேன். அவர்கள் மீது அங்கு வழக்கு விசாரணை நடந்து வருவதை கவனிக்க வேண்டும்.

தொழில், முதலீடு, ஆராய்ச்சி போன்றவற்றில் இந்தியாவுடன் இங்கிலாந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு நாடுகளுக்கும் இடையே ரூ.1.6 லட்சம் கோடிக்கான வர்த்தக ரீதியான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இது இரு நாடுகளுக்குமே 15 சதவீத வளர்ச்சியாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்களுக்கு 5.5 லட்சம் விசாக்களை வழங்கி உள்ளோம். இதில் சுற்றுலா, தொழில் போன்றவற்றுக்கான விசாக்களின் வளர்ச்சி 15 சதவீதமாகும். மாணவர்களுக்கு விசாக்கள் வழங்குவதில் 27 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

திறன் வளர்ச்சி தொழிலுக்காக வழங்கப்படும் விசாக்களில் 60 சதவீத விசாக்கள் இந்தியர்கள் பெறுகின்றனர். 40 சதவீத விசாக்கள் மற்ற நாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கிலாந்தில் கல்வி பயில்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், 2016-17-ம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரத்து 500 மாணவர்கள் சென்றுள்ளனர்.

செல்போன் உற்பத்தி போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில்தொடங்க விருப்பமாக உள்ளன. பிலிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியுள்ள சூழ்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சில நிறுவனங்கள், இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.

வர்த்தகம் மட்டுமல்லாமல், தீவிரவாத தடுப்பு, உணவு பாதுகாப்பு உள்பட பல அம்சங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்