தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் 99 தமிழக மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு

தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Update: 2018-05-17 00:01 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்