பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

Update: 2018-05-17 00:03 GMT
சென்னை,

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்து 434.

விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு நேற்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் துறை இணையதளங்களில் ( www.tnresults.nic.in, www.dge.tn.nic.in , www.dge2.tn.nic.in ) வெளியிடப்பட்டது.

பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடும் முறையில் கடந்த வருடம் முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதேபோல இந்த வருடமும் மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், 2-வது இடம், 3-வது இடம் பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்படவில்லை.

மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த முறை கொண்டுவரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 91.1 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி 1 சதவீதம் குறைந்து உள்ளது. காரணம் தேர்வில் பல கேள்விகள் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அமைந்து இருந்ததுதான்.

வழக்கம் போல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவிகளில் 94.1 சதவீதம் பேரும், மாணவர்களில் 87.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 6.4 சதவீதம் அதிகம் ஆகும்.

1,200-க்கு 1,180-க்கும் அதிக மதிப்பெண் எடுத்து 231 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இவர்களில் மாணவர்கள் 50 பேர், மாணவிகள் 181 பேர்.

6,754 மேல்நிலைப்பள்ளிகளில், 1,907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 574 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 238 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தேர்வு முடிவு வெளியிடப்பட்டவுடன் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்களில் அவர்களுடைய தேர்வு முடிவு விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடிந்தது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது கடந்த ஆண்டு போல முதல் 3 இடங்களை பெற்றவர்களின் விவரம் இந்த ஆண்டும் வெளியிடப்படாததால் மாணவர்களிடம் அதிக பரபரப்பு எதுவும் காணப்படவில்லை. மேலும் செல்போனுக்கு தேர்வு முடிவு அனுப்பப்பட்டதால் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்வதும் குறைந்தது. 

மேலும் செய்திகள்