மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- மனைவிக்கு அரசு வேலை

காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

Update: 2018-05-19 23:15 GMT
சென்னை,

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ஜெகதீஷ்துரை, கடந்த 10 நாட்களுக்கு முன்பு மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டார். மணல் கடத்தல் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜெகதீஷ்துரை குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும். அவரது குழந்தைகள் பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்கும் வரை அனைத்து கல்விச்செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும்.

நெல்லையில் அரசு பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துக்கும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், போலீசார் வேண்டுமென்றே நாடார் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதேநிலை தொடர்ந்தால் அனைத்து நாடார் சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தென்மண்டல தலைவர் பால்பாண்டியன், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்