தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

Update: 2018-05-24 03:27 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது.

கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தவர்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள். இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் 9 பேர் பலி ஆனார்கள். மேலும் திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி ஆனார். இந்த இரு சம்பவங்களிலும் பலர் காயம் அடைந்தனர்.

மேலும் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (50) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு மரணம் அடைந்தார். வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக பதற்றம் நிலவியது.  மேலும் இந்த சம்பவத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த செல்வசேகர் என்பவர் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்