கல்வி நிலையங்களில் சாதி பெயரை நீக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2026-01-11 02:55 IST

சென்னை,

செங்குந்த முதலியார் சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ''சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் நடத்தும் பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதியில் உள்ளது. இது எப்படி நியாயமாகும்? அதனால் கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும்.

சாதி பெயரை நீக்க மறுக்கும் கல்வி நிலையங்கள், சங்கங்களின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்யவேண்டும். அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்கவேண்டும்'' என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செங்குந்த முதலியார் சங்கம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜராகி, “சாதி பெயரை பயன்படுத்துவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும்'' என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்