விதிகள் வகுக்கப்படுவது எப்போது? ... ஓய்வூதியத் திட்டம் கூட திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வராதா? - அன்புமணி
இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை என அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
திமுக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மோசடியானது; அரசு ஊழியர்களை ஏமாற்றும் தன்மை கொண்டது என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டம் கூட திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாது என்று தெரியவந்திருக்கிறது. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருந்த நிலையில், அந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற மோசடியான திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. அதனால், ஏற்படும் பலன்களை விட பாதிப்புகள் தான் அதிகம் என்று பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை. ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையையும் பிறப்பிக்கவில்லை. அதனால் திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று அஞ்சிய அரசு ஊழியர்களில் சிலர், இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, திட்டத்திற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று வினா எழுப்பியது. அதற்கு 2 வாரங்களில் அரசாணை வெளியிடப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, அதன்படி நேற்றைய தேதியிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 3-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தான் இப்போது அரசாணையாக வெளியிடப்பட்டது. ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் எழுப்பிய எந்த வினாவுக்கும் அதில் விடை அளிக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் மோசடியானது; ஏமாற்று வேலை; யாருக்கு பயனளிக்கப் போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் பயன்கள் 01.01.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய விதிகள் தனியாக வகுக்கப்பட்டு வருவதாகவும், அந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 40 நாள்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இதற்கான விதிகள் வகுக்கப்பட வாய்ப்பில்லை.
எனவே, திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்பதை அரசாணையில் திமுக அரசு மறைமுகமாக தெரிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகம் ஆகும். இதற்கான தண்டனையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு தருவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.