‘அவர்களாகவே சென்றார்கள், அவர்களாகவே வரலாம்’ காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

தி.மு.க.வை யாரும் வெளியேற்றவில்லை என்றும், அவர்களாகவே சென்றார்கள், அவர்களாகவே வரலாம் என்றும் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

Update: 2018-05-31 22:00 GMT
சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் விஜயதரணி (காங்கிரஸ்) பேசும்போது, ‘இந்த அவை காலியாக இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை அவைக்கு மீண்டும் அழைக்க வேண்டும். ஒருநாள் நாங்கள் கூட்டத்திற்கு வரவில்லை. தி.மு.க. நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றோம். தற்போது நாங்கள் ஜனநாயக கடமை ஆற்ற கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறோம்’ என்றார்.

இதே கருத்தை அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) தெரிவித்தார். டி.டி.வி. தினகரன் (சுயேச்சை) பேசும்போது, ‘ஸ்டெர்லைட் விஷயத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். சட்டசபை என்பது மக்களின் அடையாளம். எனவே ஜனநாயக கடமை ஆற்ற பிரதான எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

அவர்களை (தி.மு.க.) யாரும் வெளியேற்றவில்லை. அவர்களாகவே சென்றார்கள், அவர்களாகவே வரலாம். நீங்கள் (காங்கிரஸ்) எப்படி வந்தீர்களோ? அதேபோல் ஜனநாயக கடமை ஆற்ற அவர்களும் வரலாம். இதற்கு தடை ஏதும் இல்லை. கருத்துகளை அவையில் சொல்லாமல் வெளியில் போய் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்