ஜெயலலிதா எனக்கு ‘கிங்காங்’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் வாக்குமூலம்

ஜெயலலிதா எனக்கு ‘கிங்காங்’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் என்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Update: 2018-06-06 22:30 GMT
சென்னை, 

சிகிச்சையில் இருந்த போது மிகவும் பாசமாக இருந்ததால் ஜெயலலிதா எனக்கு ‘கிங்காங்’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் என்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

மருத்துவர் பிரசன்னா ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பிரசன்னா (இவர், தற்போது சென்னையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்), நர்ஸ் ஷீலா ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினர்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த வார்டில் மருத்துவர் பிரசன்னா 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பல நாட்கள் பணியில் இருந்துள்ளார். இதனால் அந்த சமயத்தில் ஜெயலலிதா அவரிடம் பேசியிருக்க வாய்ப்புகள் உள்ளது என்ற அடிப்படையில் ஆணையம் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா உங்களிடம் பேசினாரா?, எத்தனை நாட்கள் பேசினார்?, என்னென்ன உணவுகளை எடுத்துக்கொண்டார்?, சிகிச்சையின் போது அவரது உடல்நிலை எப்படி இருந்தது? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி மற்றும் ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் கேட்டனர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பிரசன்னா பதில் அளித்துள்ளார்.

பல நாட்கள் பேசினார்

ஜெயலலிதா தன்னிடம் பல நாட்கள் பேசியதாகவும், அந்த சமயத்தில் சுய நினைவுடன் இருந்ததாகவும் பிரசன்னா தனது வாக்குமூலத்தில் கூறினார்.

‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22.9.2016 அன்றும், 4.10.2016 மற்றும் இறந்து போன 5.12.2016 அன்றும் இடது வென்ட்ரிக்கல் (ரத்தத்தை பம்ப் செய்து உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் இருதயத்தின் ஒரு பகுதி) செயல்படவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடியாத பாதிப்பு அல்ல. உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் இதை சரி செய்து இருக்கலாம் அல்லவா’ என்று ஆணையத்தின் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு மருத்துவர் பிரசன்னா ‘ஆமாம். சரி செய்து இருக்கலாம்’ என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு பிடிக்கும்

அதேபோன்று நர்ஸ் ஷீலா, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த பெரும்பாலான நாட்கள் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி குறிப்பிட்ட நேரத்துக்கு உணவு, மாத்திரைகளை ஜெயலலிதாவுக்கு ஷீலா தான் பெரும்பாலான நாட்கள் வழங்கி உள்ளார்.

நர்சுகள் ஷீலா, சாமுண்டீசுவரி, ரேணுகா ஆகியோரிடம் ஜெயலலிதா மிகவும் பாசமாக இருந்துள்ளார். ஒருமுறை ஜெயலலிதா உணவு சாப்பிட மறுத்துள்ளார். அப்போது ஷீலா, தனது குழந்தைக்கு உணவு கொடுப்பது போன்று ஜெயலலிதாவை கட்டாயப்படுத்தி உணவு கொடுத்துள்ளார். இது, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துள்ளது. அப்போது ஜெயலலிதா, ‘ஷீலாவுக்காகத்தான் சாப்பிடுகிறேன்’ என்று கூறி அவர் கொடுத்த உணவை சாப்பிட்டு உள்ளார்.

பட்டம் சூட்டி மகிழ்ந்தார்

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்சுகள் கூட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நடத்தியபோது, அந்தக்கூட்டத்தில் மேற்கண்ட தகவலை ஷீலா வெளியிட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தி உண்மையானது தானா? என்று அந்த செய்தியை காண்பித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த செய்தி உண்மையானது தான் என்று ஷீலா ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அவர், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது என்னிடமும், நர்சுகள் சாமுண்டீசுவரி, ரேணுகா ஆகியோரிடம் மிகவும் பாசமாக இருந்ததாகவும், இதனால் எங்களுக்கு அவர், ‘கிங்காங்’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்ததாகவும், அவரை இழந்தது மனவேதனையை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்