‘மதமும் ஆன்மிகமும் ஒற்றுமைக்கு உரமாக இருக்கவேண்டும்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘மதமும் ஆன்மிகமும் ஒற்றுமைக்கு உரமாக இருக்கவேண்டும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2018-06-07 23:15 GMT
சென்னை,

அ.தி.மு.க. சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நிலோபர் கபில் உள்பட அமைச்சர்கள், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா எம்.பி., ஆற்காடு இளவரசர் முகமது அலி, இளவரசி சாயிதா பேகம், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் ஏ.அபுபக்கர் மற்றும் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரமலான் நோன்பு நமக்கு சொல்லும் பல செய்திகளில் ‘நம்பிக்கை’ என்ற செய்தியை மிகவும் முக்கியமான செய்தியாக நான் கருதுகின்றேன். ‘நம்பிக்கை தான் நமது வாழ்க்கை. அதுவே நம்மை உயர்த்தும், நம்மை வளமாய், நலமாய் வாழவைக்கும். அதே நம்பிக்கை தான் நமது பாவங்களையும் நிச்சயம் அழிக்கும் என்பது நோன்பு நமக்கு சொல்லும் செய்தி.

சமய நல்லிணக்கத்துக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. எனவே மதமும், ஆன்மிகமும் ஒற்றுமைக்கு உரமாக இருக்க வேண்டும். அந்த உரத்தில்தான் அனைத்து மக்களும் வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்று இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் மூலம் எல்லாம் வல்ல இறைவனை உளமார வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “இஸ்மாமிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வாரி வழங்கியவர் ஜெயலலிதா. இஸ்லாமிய சமுதாயத்தின் மீது ஜெயலலிதா கொண்டிருந்த தனி அக்கறையை, அவர் காட்டிய பேரன்பை, கற்றுத்தந்த மத நல்லிணக் கத்தை அவர் வகுத்த பாதையில் துளி அளவும் குறையாமல் நாங்கள் கட்டிக் காப்போம். இந்த நோன்பு திறக்கும் விழாவில் இஸ்லாம் மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 30 நாட்கள் நோன்பு முடிந்து, வரவிருக்கும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் சீரும் சிறப்புமாக அமைந்திட இறைவனிடம் வேண்டுகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்