மருத்துவ கல்விக்கட்டணம் விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Update: 2018-06-09 21:01 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதுவரை ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கல்விக்கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக மருத்துவ கல்விக் கட்டணம் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வரை மிச்சமாகும். ஆனால், உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால கல்விக் கட்டணமே மிகவும் அதிகம் என்பது தான் பெரும்பான்மையான கல்வியாளர்களின் கருத்து.

எனவே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படுவது போன்ற இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்