சென்னையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை மேலும் ரூ.7.3 கோடி, 20 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்

சென்னையில் உள்ள காந்தி குழும நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர்.

Update: 2018-06-09 22:10 GMT
சென்னை, 

சென்னையில் உள்ள காந்தி பேப்ரிக்ஸ் நிறுவனம் மீது வருமானவரித்துறைக்கு வரி ஏய்ப்பு புகார் வந்தது. அதன்பேரில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் மற்றும் கடைகளில் நேற்றுமுன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதுமட்டுமன்றி அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய தியாகராயநகர், பாரிமுனை, பல்லாவரம் உள்பட 23 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்து, கணக்கில் வராத ரூ.7 கோடி பணமும், 15 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.

2-வது நாளாக சோதனை

இந்தநிலையில் சவுகார்பேட்டை, பெரியமேடு உள்பட அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 13 இடங்களில் 2-வது நாளாக நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 2-வது நாள் சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து முதலீட்டு பத்திரங்கள், ரூ.7.3 கோடி ரொக்கப்பணம், 20 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. 

மேலும் செய்திகள்