இயக்குனர் அமீர், புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் இயக்குனர் அமீர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? என்பது குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Update: 2018-06-11 22:15 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் நேரம் இல்லா நேரத்தில்(ஜீரோ அவர்ஸ்) சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உ.தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் பேசும்போது, ‘புதிய தலைமுறை மற்றும் இயக்குனர் அமீர் மீது கோவை போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்துக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, அவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் தகவலை பதிவு செய்தார். இவ்விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது.

புதிய தலைமுறை தொலைக் காட்சி வட்டமேசை விவாதம் ஒன்றை, கோவை மாநகர், பீளமேடு, ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கம் ஒன்றில் உள்ளரங்க கூட்டமாக 8.6.2018 அன்று மாலை நடத்த விண்ணப்பிக்க விவரம் கேட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை 4.6.2018 அன்று அணுகிய போது, காவல் துறையினர், மதரீதியாக பதற்றம் நிறைந்த கோவை மாநகரில் சர்ச்சைக்குரிய இம்மாதிரியான கூட்டங்கள் நடத்துவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், போலீசாரின் அனுமதி இன்றி, 8.6.2018 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில், அதே தனியார் கல்லூரி கலையரங்கில், வட்டமேசை விவாதம் துவங்கியது.

போலீசார் அனுமதி வழங்காதபோதும், பல கட்சி மற்றும் அமைப்புகள் சேர்ந்த தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்ற காரணத்தால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, பாபர் மசூதி இடிப்பு மற்றும் விவாத தலைப்பிற்கு தொடர்பில்லாத சங்கதிகளைப் பற்றி குறிப்பிட்டபோது, கூட்டத்தில் சற்று சலசலப்பு எழுந்துள்ளது.

பின்னர், திரைப்பட இயக்குனர் அமீர் சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பேசியபோது, அரங்கத்தில் அமர்ந்திருந்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் கோஷமிட்டுள்ளனர். அப்போது மேடையில் இருந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர், அவர்களை சமாதானம் செய்தும், கூச்சலும், குழப்பமும் தொடர்ந்து இருந்து வந்ததால், அந்த நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து, கலையரங்கத்தின் பொறுப்பாளர் சுந்தரராஜன் 9.6.2018 அன்று, கோவை பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், திரைப்பட இயக்குனர் அமீர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், கலையரங்கின் மேலாளர் ஆனந்தகுமார் என்பவர் அன்றே பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், புதிய தலைமுறை தொலைக் காட்சியின் நிருபர் சுரேஷ் குமார் நிகழ்ச்சிக்கு அரங்கத்தை பதிவு செய்த போது, வட்டமேசை விவாத நிகழ்ச்சியை மாணவர்களை வைத்து நடத்துவதாக தெரிவித்துவிட்டு, விவாதத்தில் எதிர்மறைக் கருத்துகள் கொண்ட பிரமுகர்களை அழைத்து, அவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காமலும், நிகழ்ச்சியை பார்க்க வருபவர்களை பதிவு செய்யவும், அவர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமல், நிகழ்ச்சியின் போது சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசப்பட்டால் பிரச்சினை வரும் என்று தெரிந்தும், சிலரை பேச அனுமதித்து பிரச்சினை ஏற்படுத்தியதற்காக நிருபர் சுரேஷ்குமார் மீதும், தொலைக்காட்சி நிறுவனம் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.

இது தொடர்பாக, காவல் துறையினர் குற்ற எண். 964/2018, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153 (ஏ), 505 மற்றும் தமிழ்நாடு பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் இழப்பு தடுப்பு சட்ட பிரிவு 3(1)ன்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவ்வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என சில பத்திரிகை சங்கங்களும், சில அரசியல் கட்சி தலைவர்களும் கோரியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால், விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயலலிதாவின் அரசு, பேச்சுரிமைக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எப்போதும் மதிப்பும் முன்னுரிமையும் அளித்து வருகின்ற அரசு. இருப்பினும், இது போன்ற பொது நிகழ்ச்சிகள், மதரீதியாக அல்லது சட்டம்- ஒழுங்கை பாதிக்கக்கூடிய வகையில் அமையுமேயானால், அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்கு உண்டு.

எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) அங்கே கலந்து கொண்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இங்கே குறிப்பிட்டார்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்