அரசிடம் மனம் இருக்கிறது; ஆனால் பணம் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசிடம் மனம் இருக்கிறது; ஆனால் பணம் இல்லை என அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்தார்.

Update: 2018-06-12 23:54 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் விஸ்தரிப்பு பகுதியில் நேற்று முன்தினம் காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலெக் சாண்டர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக் குமார் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது.

இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் மற்றும் ஊர் மக்களோடு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இரட்டை இலை தள்ளாடுகிறது; தாமரை இல்லை என்றால் இலை இல்லை என்று கூறுபவர்கள் உலகை உணராதவர்கள். மக்களின் மனநிலை புரியாதவர்கள். கற்பனை உலகில் வாழ்பவர்கள்தான் இது போன்ற கருத்துகளை கூறுவார்கள்.

27 வருடங்களாக அரியணையில் இருக்கும் கட்சி அ.தி.மு.க. தான். எனவே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தாமரைக்கோ, மக்கள் நீதி மய்யத்திற்கோ, புதிதாக முளைத்திருக்கும் கட்சிகளுக்கோ இடம் இல்லை.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அரசின் நிதி நிலைமையை பொறுத்துத்தான் மேற்கொண்டு முடிவு செய்ய முடியும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசிடம் மனம் இருக்கிறது; ஆனால் பணம் இல்லை. ஊதியக்குழு முரண்பாடு, ஓய்வூதியம் போன்றவைகளுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்