சேலம்: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 16-வயது சிறுவன் சடலமாக மீட்பு

சேலத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 16-வயது சிறுவன் முகம்மது ஆஷாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

Update: 2018-07-03 04:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின் போது பயங்கர காற்று வீசியதால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் விடிய, விடிய மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.கனமழை காரணமாக சேலத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. 

சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத் (வயது 16). எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினான். வீடு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓடையில் முகமது ஆஷாத் தவறி விழுந்தான். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. முகமது ஆஷாத் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் விரைந்து சென்று தேடி பார்த்தனர். சம்பவ இடத்துக்கு கிச்சிப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே சென்று மாணவனை தேடினர். தண்ணீர் அதிகமாக சென்றதால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. 24 மணி நேரமாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில், இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சிறுவன் முகம்மது ஆசாத்  சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

மேலும் செய்திகள்