காவல் துறையில் மகளிர் பாதுகாப்புக்கு தனி பிரிவு தொடங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மகளிர் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில், காவல் துறையில் மகளிர் பாதுகாப்புக்கு தனி பிரிவு தொடங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-07-06 21:36 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆணையிடக்கோரி ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலரும், காவல்துறை தலைமை இயக்குனரும் தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில் தான் மகளிரும், குழந்தைகளும் தமிழகத்தில் எந்த அளவுக்கு ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது ஒருபுறமிருக்க, இத்தகைய குற்றங்களைச் செய்தவர்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தண்டனை பெறாமல் தப்பி விடுகின்றனர் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 11,625 ஆகும். இவற்றில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 257 மட்டும் தான். 2017-ம் ஆண்டில் பதிவான 10,677 வழக்குகளில் 121 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி வழக்கு விசாரணையை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

மகளிர் காவல் நிலையங்களை வலுப்படுத்துதல், கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அதிக எண்ணிக்கையில் புதிய காவல் நிலையங்களைத் திறத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கென தனிப்பிரிவை மகளிர் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தொடங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்