பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காரை எரித்து நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

இந்து மக்கள் கட்சி பிரமுகர் காரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில், தனது காரை அவரே எரித்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

Update: 2018-07-07 23:00 GMT
செங்குன்றம், 

பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் புங்கம்பேடு கதிர்வேல் தெருவைச் சேர்ந்தவர் காளிக்குமார் (வயது 54). இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநில செயலாளரான இவர், நேற்று முன்தினம் மாலையில் அந்த அமைப்பின் மீஞ்சூர் நகர செயலாளர் ஞானசேகருடன் தனது காரில் திருவள்ளூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் மீஞ்சூர்-வண்டலூர் 6 வழிச்சாலையில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது, கார் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே ஆபத்தை உணர்ந்த காளிக்குமார் மற்றும் ஞானசேகர் இருவரும் காரின் கதவை திறந்து அலறியடித்து வெளியில் வந்தனர்.

பெட்ரோல் குண்டு

பின்னர் இது குறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோரும் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஹெல்மெட் அணிந்து கொண்டு 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தங்கள் காரை பின்தொடர்ந்து வந்ததாகவும், அவர்கள் திடீரென காரை வழிமறித்து கையில் இருந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாகவும் போலீசாரிடம் காளிக்குமார் கூறினார்.

3 பேர் கைது

ஆனால் அவரது பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தனது காரை தானே பெட்ரோல் ஊற்றி எரித்ததை காளிக்குமார் ஒப்புக்கொண்டார்.

தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்பதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து காளிக்குமார், ஞானசேகர் (32) மற்றும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த காளிக்குமாரின் அண்ணன் மகன் ரஞ்சித் (22) ஆகிய 3 பேரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்