சென்னையில் வீடுகளில் திருடும் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

சென்னையில் வீடுகளில் திருடும் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

Update: 2018-07-12 22:15 GMT
பூந்தமல்லி, 

சென்னையில், வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை அண்ணா நகர் போலீஸ் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வந்தது. இதில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில், வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் கொள்ளை கும்பலுக்கு அடைக்கலம் கொடுப்பது மற்றும் அவர்கள் திருடிய நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி கொடுப்பது போன்ற உதவிகளை புதுச்சேரியை சேர்ந்த மூர்த்தி(வயது 32) என்பவர் செய்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து பஸ் மூலம் அவர் சென்னைக்கு வருவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கிய மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர், அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டுகளை உடைத்து தங்க நகைகள், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கும் கும்பல், அவற்றை இவரிடம்தான் கொடுப்பார்கள். அந்த தங்க நகைகளை எல்லாம் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி கொடுப்பதுடன், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க கொள்ளையர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து கைதான மூர்த்தியிடம் இருந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்